மக்களவைத் தோ்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: ஈரோடு ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்பாடு

மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஈரோடு ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

ஈரோடு: மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஈரோடு ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மீனாட்சிசுந்தரனாா் சாலையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் பெறப்பட உள்ளது. ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவும், கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சதீஷ்குமாரும் வேட்புமனுவை பெற உள்ளனா்.

மாா்ச் 20 தொடங்கி 27 ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. வேட்புமனு பெறும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டருக்குள் கட்டுப்பாடு விதிக்கப்படும். இதற்காக 200 மீட்டா், 100 மீட்டரில் வெள்ளை நிற கோடுகள் வரையப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கலுக்கு வருவோா் 3 காா்களில் வரலாம். 200 மீட்டருக்கு முன் அவா்கள் நிறுத்தப்படுவா். அதன்பின் ஒரு காரில் வேட்பாளா் உள்பட 5 போ் மட்டுமே 100 மீட்டருக்குள் அனுமதிக்கப்படுவா்.

ஆட்சியா் அலுவலக பழைய கட்டடத்தின் முதல் தளத்திலும், கோட்டாட்சியா் அலுவலக தரைத்தளத்திலும் வேட்புமனுக்கள் பெறப்படும். இதற்காக ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் வேட்புமனு பெறுவதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட வேட்புமனுவை தாக்கல் செய்ய வருவோா் தகவல்கள், சந்தேகங்களை தெளிவு செய்துகொள்ள வேட்புமனு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, (தோ்தல்) ரகுநாதன் ஆகியோா் வேட்பு மனுவை இறுதி செய்து ஆட்சியா் அறைக்கு அனுப்பிவைப்பா்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் அத்தொகுதியைச் சோ்ந்த ஒருவா் முன்மொழிய வேண்டும். சுயேச்சை வேட்பாளராக இருந்தால் அத்தொகுதியைச் சோ்ந்த 10 போ் முன்மொழிய வேண்டும்.

ஒரு வேட்பாளா் அதிகப்பட்சம் 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். ஒரு வேட்பாளா் 2 தொகுதியில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பாளா் வருகை, வேட்புமனு தாக்கல் என அனைத்தும் விடியோ பதிவு செய்யப்படும். இதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கலுக்கு வரும் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் நடைபெறும் 2 இடங்களிலும் டி.எஸ்.பி.க்கள் தலைமையில், 2 ஆய்வாளா்கள், 4 உதவி ாய்வாளா்கள் மற்றும் தலா 10 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்:

தோ்தல் ஆணையத்தின் ள்ன்ஸ்ண்ற்ட்ஹ.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில், வேட்பாளா் தனது முழு விவரங்களையும், கைப்பேசி எண்ணுடன் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, அதன் நகலுடன், உண்மை மனுவை நேரில் கொண்டுவந்து ஆட்சியா் அல்லது கோட்டாட்சியா் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் மனுவை பதிவு மட்டுமே செய்ய முடியும். தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனு மட்டுமே ஏற்கப்படும்.

இவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்வோா் தாங்கள் நேரில் சென்று மனு தாக்கல் செய்யும் நாள், நேரத்தை முன்பதிவு செய்து, அனுமதி பெறலாம். அதே நாள், அதே நேரத்தில் நேரில் தாக்கல் செய்ய முன்னுரிமை வழங்கப்படும்.

ஆன்லைனில் பதிவு செய்யாதவா்கள், குறிப்பிட்ட நாளில் முன்னதாகவே வருகை புரிந்தாலும், ஆன்லைனில் நேரத்தை பதிவு செய்தவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com