ஈரோடு கோட்டாட்சியா் சதீஷ்குமாரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறாா் சுயேச்சை வேட்பாளா் மின்னல் முருகேஷ்.
ஈரோடு கோட்டாட்சியா் சதீஷ்குமாரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறாா் சுயேச்சை வேட்பாளா் மின்னல் முருகேஷ்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல்நாளான புதன்கிழை சுயேச்சை வேட்பாளா் ஒருவா் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளாா். ஈரோடு மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. ஆட்சியா் அலுவலகம், ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்புமனு தாக்கலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி 2 அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 4 போ் மட்டுமே வர வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகிா என்று தோ்தல் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். ஈரோடு ஆட்சியா் அலுவலகத்திலும், கோட்டாட்சியா் அலுவலகத்திலும் மெட்டல் டிடெக்டா் மூலமாக போலீஸாா் அனைவரையும் பரிசோதனை செய்தனா்.

கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக 2 அலுவலகங்களும் முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் ஈரோடு மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கராவும், கோட்டாட்சியா் அலுவலகத்தில் முதன்மை உதவி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான சதீஷ்குமாரும் வேட்பு மனுக்களை பெறுகின்றனா். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல்நாளில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 2.50 மணி அளவில் ஈரோடு ரங்கம்பாளையம், இரணியன் வீதியைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் மின்னல் முருகேஷ் (55) வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா். அம்பேத்கா் தேசிய மக்கள் கட்சி நிறுவனரான அவா், நஞ்சை ஊத்துக்குளி அருகே சென்னநாயக்கன்பாளையத்தில் சீரடி மகாகுரு சாய்பாபா கோயில் நடத்தி வருகிறாா். அந்த கோயிலில் பூசாரியாகவும் உள்ளாா். ஆட்சியா் அலுவலகத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com