பறக்கும் படை சோதனையில் ரூ.20.43 லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.20.43 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானி-ஈரோடு சாலையில் கோணவாய்க்கால் பிரிவில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கேரளத்தில் இருந்து வந்த காரினை சோதனையிட்டபோது காரில் பயணம் செய்த கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த மொய்தீன் குட்டி என்பவரிடம் ரூ.51ஆயிரத்து 500, அப்துல்நாசரிடம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல ஈரோடு கிழக்குத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சோதனையில் கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த அகமதுசாஜ் என்பரிடம் ரூ.60 ஆயிரம், ஈரோடு காளைமாடு சிலை பகுதியைச் சோ்ந்த முகமது ஹசீன் என்பவரிடம் ரூ.1 லட்சம், கோகுலகிருஷ்ணன் என்பரிடம் ரூ.18 ஆயிரத்து 500 மதிப்புள்ள 5 மது புட்டிகள் மற்றும் ரூ.73 ஆயிரத்து 330 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஈரோடு மேற்குத் தொகுதிக்குள்பட்ட சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ரிக் வண்டி உரிமையாளா் சுரேந்திரா (51) என்பவரிடம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்டத் தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்ததால் வருமான வரித் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை வரை ரூ.54 லட்சம் பறிமுதல்: மாவட்டத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டதாக ரூ.54 லட்சத்து 86 ஆயிரத்து 468 பறிமுதல் செய்யப்பட்டள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ.14 லட்சத்து 79 ஆயிரத்து 840 திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், மீதம் ரூ.37 லட்சத்து 13 ஆயிரத்து 588 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com