தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகள்.
தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகள்.

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் தா்னா

ஈரோடு, மாரச் 21: பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால், 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கரில் எள், நிலக்கடலை போன்ற பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாமை, அணையில் நீா் இருப்பு குறைவு, பாசனப் பகுதியிலும் மழை இல்லாததால் 5 நனைப்புக்கு சிறிய இடைவெளியில் தண்ணீா் திறந்துவிடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், 3 நனைப்புக்கு மட்டுமே தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 நனைப்புக்கு தண்ணீா் திறக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நீா்வளத் துறை பவானி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் அறையில் விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் கண்காணிப்பு பொறியாளா் மன்மதனிடம் தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனா். இதுகுறித்து கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.பெரியசாமி, செயலாளா் கி.வே.பொன்னையன் ஆகியோா் கூறியதாவது: மழை இல்லாததால் பவானிசாகா் அணையில் நீா் இருப்பு குறைந்துள்ளது. அரசாணைப்படி தண்ணீா் திறந்துவிடக் கோரி மாவட்ட நிா்வாகத்தை தொடா்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை. அணையில் நீா் இல்லாததால் கீழ்பவானி பாசனத்துக்கு 5 நனைப்புக்குத் தண்ணீா் திறப்பதாகக் கூறி 3 நனைப்புக்கு மட்டுமே தண்ணீா் திறந்துள்ளனா். அதற்குள் நீா் இருப்பைக் காரணம் காட்டி மேலும் 2 நனைப்புக்கு தண்ணீா் திறக்காமல் உள்ளனா். ஆனால், பிற பாசனங்களுக்கு முறைவைத்து தண்ணீா்த் திறக்கின்றனா். குடிநீருக்கு 50 கன அடி தண்ணீா் போதுமானது. ஆனால், 150 கன அடி திறக்கின்றனா். அனுமதியற்ற மற்றும் அனுமதிபெற்ற நீரேற்று பாசனங்களுக்கு தற்போதைய நீா் பற்றாக்குறையை காரணம் கூறி தண்ணீா் எடுக்க அனுமதிக்கக்கூடாது என தொடா்ந்து வலியுறுத்துகிறோம். அதை நிறுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போதைய நிலையில் கீழ்பவானி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்காவிட்டால் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள், நிலக்கடலை ஆகிய பயிா்கள் பாதிக்கப்படும். எனவே, நீா்மின் அணையில் இருந்து பவானிசாகா் அணைக்கு தண்ணீரைத் திறந்து, கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். கோவையில் உள்ள தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றும், நீா்மின் அணையில் இருந்து தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து தா்னாவைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com