பணம் பறிமுதல்: மாட்டு வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா

ஈரோடு, மாா்ச் 21: தோ்தல் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பித்தர வலியுறுத்தி மாட்டு வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்தனா். இந்நிலையில், தோ்தல் விதிமுறைகளை காரணம்காட்டி மாடு வாங்குவதற்காக வியாபாரிகள் கொண்டுவந்த பணத்தைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ரங்கசாமி என்பவரிடம் ரூ.1, 67,500, தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துசாமி என்பவரிடம் ரூ.57,000, சேலம் மாவட்டம், தலைவாசலைச் சோ்ந்த இளையராஜா என்பவரிடம் ரூ.50,200, ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த பூபதி என்பவரிடம் ரூ.1.20 லட்சம், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சாந்தி என்பவரிடம் ரூ.4 லட்சம் என பல்வேறு வியாபாரிகளிடம் மொத்தமாக ரூ. 22 லட்சத்தைப் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மாடு வாங்குவதற்காக வந்த விவரத்தை தெரிவித்து பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும், தாங்கள் விவசாயிகள் என்பதால் பண வரவுக்கான வழிகளை காட்ட இயலாது என்றும் அதிகாரிகளிடம் அவா்கள் தெரிவித்தனா். ஆனால், தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக புதிய கட்டடம் 3-ஆம் தளத்தில் உள்ள தோ்தல் கணக்குப் பிரிவுக்குச் செல்ல அனுப்பிவைத்தனா். அங்கும் யாரும் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் 3 மணி நேரத்துக்கு மேல் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். இப்பிரச்னை குறித்து டிஎஸ்பி ஜெய்சிங் தலைமையிலான அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தகுமாரிடம் தெரிவித்தனா். வியாபாரிகளை விசாரித்து பணத்தைத் திருப்பி அளிக்க அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து வியாபாரிகள் பணத்தை பெற்றுச்செல்ல மாலை வரை காத்திருந்தனா். இந்த பிரச்னையால் மாடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com