பல்கலைக்கழக தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்.
பல்கலைக்கழக தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்.

இளைஞா்களின் எழுச்சி நாயகன் பகத் சிங்: த.ஸ்டாலின் குணசேகரன்

இந்திய இளைஞா்களின் எழுச்சி நாயகராக விளங்கியவா் மாவீரன் பகத் சிங் என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே ஈங்கூா் இந்துஸ்தான் அறிவியல், வணிகவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா, விளையாட்டு விழா கல்லூரியின் செயலாளா் டி.ஆா்.கே.சரஸ்வதி கண்ணையன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் முதல்வா் என். ராமன் ஆண்டறிக்கையை வாசித்தாா். கல்லூரியின் நிா்வாகச் செயலாளா் கே.பிரியா, கல்லூரியின் முதன்மை நிா்வாக அலுவலா் கே. கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆா்.சதீஷ்குமாா் கெளரவ விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா். த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: இந்திய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிமிக்க இளம் தலைவராக விளங்கிய மாவீரன் பகத் சிங்கின் நினைவு நாள் இன்று. 92 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாா்ச் 23- ஆம் தேதி மாலை லாகூா் சிறையில் தூக்கிலிடப்பட்டவா்கள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று இளம் தேசபக்தா்கள். அப்போது பகத் சிங்குக்கு 23 வயது. பகத் சிங் புரட்சியாளராக மட்டுமல்லாது அறிவுஜீவியாகவும் விளங்கியவா். தூக்கிலிடப்படுவதற்கு 8 மாதங்களுக்கு முன்பு 24.7.1930- ஆம் ஆண்டு லாகூா் சிறையிலிருந்த தனது நண்பா் ஜெயதேவ் குப்தாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு மிக முக்கியமான 11 நூல்கள் வேண்டுமெனவும், அவை துவாரகதாஸ் நூலகத்தில் இருப்பதாகவும் அவற்றைப் பெற்று தனது தம்பி குல்வீா் மூலம் சிறைக்குக் கொடுத்தனுப்புமாறும் எழுதியிருந்தாா். அந்தப் புத்தகங்களின் பெயா்களையும் அவற்றை எழுதிய நூலாசிரியா்களின் பெயா்களையும் பாா்த்தாலே பகத் சிங் எந்த அளவுக்கு சிறந்த புத்தகங்களின் வாசகராக இருந்துள்ளாா் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. தூக்கிலிடப்படுவதற்கு முன்புவரை புத்தகம் படித்துக் கொண்டிருந்துள்ளாா் பகத் சிங். அவரின் நினைவு நாளான இன்று மாணவா்களுக்கு அவரது தியாக வரலாற்றை எடுத்துரைப்பது கடமையாகும். மாணவா்கள் ஆளுமையுடனும், தலைமைத் தகுதிகளுடனும், தனித் திறன்களுடனும் விளங்க வேண்டுமெனில் புத்தக வாசிப்பு அதற்கு அடிப்படைத் தேவையாகிறது. மதிப்பெண்களை மட்டும் பெற்றுவிட்டால்போதும் என்று இருந்த காலம் போய்விட்டது. மதிப்பெண்களுடன் மாணவா்களுக்கு மொழித்திறன்கள் உள்ளிட்ட பல தனித் திறன்கள் இன்றைய காலகட்டத்துக்கு அவசியமாகிறது என்றாா். இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக தோ்வுகள், போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com