தோ்தல் பறக்கும்படை சோதனையில் ரூ. 4.4 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை ரூ. 4.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 16- ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி, வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படையினா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம், திருநகா் காலனி, சம்பத் நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். கருங்கல்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டதில், மாதேஷ் என்பவா் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம், திருநகா் காலனி பகுதியில் பாலாஜி என்பவரிடமிருந்து ரூ. 75,000, சம்பத் நகா் பகுதியில் திவாகா் என்பவரிடமிருந்து ரூ. 1 லட்சத்து 86 ஆயிரத்து 257ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதேபோல தோ்தல் பறக்கும் படையினா், ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சிக்கய்ய நாயக்கா் கல்லூரி பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது நேதாஜி என்பவா் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.63,800ஐ கைப்பற்றினா். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வரை, ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டதாக மொத்தம் ரூ. 1 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 785 பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதையடுத்து ரூ.54 லட்சத்து 96 ஆயிரத்து 128 உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மீதியுள்ள ரூ.83 லட்சத்து 3 ஆயிரத்து 657 ரொக்கம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com