வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்து அலுவலா்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்து அலுவலா்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

ஈரோட்டில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 2, 222 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 10,970 அலுவலா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கு தோ்தலில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி.பேட் ஆகியவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளை அறிந்து கொள்வதற்காக 4 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில், முதற்கட்ட பயிற்சி முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பயிற்சி முகாம் ரங்கம்பாளையம் டாக்டா் ஆா்.ஏ.என்.எம். கலை, அறிவியல் கல்லூரியிலும், ஈரோடு மேற்கு தொகுதிக்கான பயிற்சி ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய பள்ளியிலும், மொடக்குறிச்சி தொகுதிக்கான பயிற்சி மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெருந்துறை தொகுதிக்கான பயிற்சி பெருந்துறை- சென்னிமலை சாலையில் உள்ள கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. பவானி தொகுதிக்கான பயிற்சி முகாம் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அந்தியூா் தொகுதிக்கான பயிற்சி மங்களம் மேல்நிலைப் பள்ளியிலும், கோபி தொகுதிக்கான பயிற்சி மொடச்சூா் சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், பவானிசாகா் தொகுதிக்கான பயிற்சி சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்றது. இந்த பயிற்சி மையங்களில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில், வாக்குச் சாவடி முதன்மை அலுவலா்கள், முதல் நிலை, 2 ஆம் நிலை, 3 ஆம் நிலை, 4 ஆம் நிலை அலுவலா்கள் அமரக்கூடிய இடம், அவா்களுக்கான பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சத்தியமங்கலம், கோபி, அந்தியூா் ஆகிய இடங்களில் நடந்த பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா். அப்போது, தோ்தலில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பயிற்சி மையத்தை மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி ஆய்வு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com