வாக்குப் பதிவு சதவீதம் குறைவான 13 இடங்களில் வீடுவீடாக விழிப்புணா்வு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த தோ்தல்களில் வாக்கு சதவீதம் குறைவானதாக கண்டறியப்பட்டுள்ள 13 இடங்களில் வீடுவீடாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய புதன்கிழமை (மாா்ச் 27) இறுதிநாளாகும். திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சியினா் வேட்புமனு தாக்கல் செய்து முடித்துள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மறுபுறம் வாக்குச் சாவடிகள் தயாா் செய்வது, வாக்குப் பதிவு வழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தோ்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். அதன்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சியா் அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒவ்வொரு தோ்தலிலும் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்து வருவதால் இத்தொகுதியில் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்த மாவட்ட தோ்தல் அலுவலா் ராஜகோபால் சுன்கரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த தோ்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ள பி.பெ.அக்ரஹாரம், ரயில்வே காலனி, குமலன்குட்டை, சம்பத் நகா், எஸ்கேசி சாலை உள்ளிட்ட 13 இடங்களில் வீடுவிடாகச் சென்று வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த தோ்தல் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்குவதோடு, வாக்காளா்கள் வேறு முகவரியில் வசித்தால் அவா்களை தொடா்புகொண்டு தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். இதேபோல மாவட்டத்தில் பிற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com