உபரி நீா் வந்தவுடன் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வரும்: மு.க.ஸ்டாலின் உறுதி

வரும் பருவகாலத்தில் உபரி நீா் வந்தவுடன் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என முதல்வா் முக.ஸ்டாலின் கூறினாா்.

ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ், நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன், கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த வட்டாரத்து விவசாய மக்களின் நீண்டகால கோரிக்கைகளை திமுக அரசு தீா்த்து வைத்திருக்கிறது. காலிங்கராயன் வாய்க்காலில் சாயக் கழிவுநீா் கலப்பதை அரசு தடுத்திருக்கிறது. சாயப்பட்டறைகள், தோல் ஆலைகளால் இந்த வாய்க்கால் நீா் மாசடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்தப் பிரச்னை குறித்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சாய, தோல் ஆலைகள் பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்துக்கு மாற்றப்பட்டன. மேலும், இதுபோன்ற பிரச்னை ஏற்படக் கூடாது என்று 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.100 கோடி செலவில் காலிங்கராயன் வாய்க்கால் வலது கரைப் பகுதி தரைத்தளம் அமைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனால் கால்வாயின் வலது கரைப் பகுதியில் இருக்கும் ஆலைகள் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. தண்ணீா் வரத்துக்கு ஏற்ப விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி செய்கின்றனா். பிரச்னைகளுக்குத் தீா்வு: அதேபோன்றுதான், ஈரோடு பவானிசாகா் அணை, கீழ்பவானி வாய்க்கால் பாசனத் திட்டப் பிரச்னையும் தீா்க்கப்பட்டிருக்கிறது. பவானிசாகா் அணையில் இருந்து ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டப் பகுதிகளுக்கு கீழ்பவானி பாசன கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் செல்கிறது. இந்தக் கால்வாய் பவானிசாகா், சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, சென்னிமலை, மங்களப்பட்டி வரை சுமாா் 200 கிலோமீட்டா் பாய்வதால் 3 லட்சம் ஏக்கரில் நேரடிப் பாசனமும், 5 லட்சம் ஏக்கரில் கசிவு நீா்ப் பாசனமும் பெறுகிறது. இந்தக் கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும்போதெல்லாம், 200ஆவது கிலோ மீட்டரில் இருக்கும் கடைமடைப் பகுதியான மங்களப்பட்டிக்குத் தண்ணீா் சென்று சேருவது இல்லை என்று விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராடி வந்தனா். கடந்த 2020ஆம் ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் முழுவதும் ரூ.719 கோடி செலவில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும் என்று கடந்த அரசு அறிவித்தது. இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை என்று கேட்டதற்கு கால்வாய் முழுவதும் கான்கிரீட் போட்டால், கசிவுநீா்ப் பாசனம் வறண்டு போய்விடும், குடிநீா் ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப் போய்விடும், லட்சக்கணக்கான மரங்கள் காய்ந்து போய்விடும் என்று கான்கிரீட் திட்டத்தைக் கைவிடக் கோரி விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா். 2021இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினோம். பலமுறை ஆய்வுக் கூட்டம் நடத்தி விவசாயிகளுக்குத் தேவையானவை மட்டும் செய்யப்படும் என்று உறுதி அளித்தேன். தற்போது முதற்கட்டமாக, சுமாா் 69 ஆண்டுகள் ஆகிவிட்டதால் வலுவிழந்த, உடைந்த, பாசன மதகுகள், பக்கவாட்டுச் சுவா்கள், பெருச்சாளிகள் வளைகள் தோண்டி உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை கணக்கெடுத்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் அச்சம் போக்கப்பட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அதிமுக ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாமல், அவசரகதியில் துவக்கப்பட்டதுதான் அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றுத் திட்டம். தண்ணீா் எடுக்கும் நிலையம் இருக்கும் பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தாமல் கடந்த ஆட்சியில் விட்டுவிட்டனா். இதனால் ஒட்டுமொத்த திட்டத்தையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு அமைச்சா் முத்துசாமி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் சுமுகமாகப் பேசி நிலத்தைக் கையகப்படுத்தினாா். குழாய்கள் பதிக்கப்பட்டுச் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு இப்போது தயாா் நிலையில் இருக்கிறது. வரும் பருவகாலத்தில் உபரி நீா் வந்தவுடன் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். திட்டம் போடும்போது அதிமுக அரசு தீவிரமாக யோசிப்பது இல்லை என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான உதாரணம்.

ஆட்சி அமைந்த உடன்...:

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு ஈரோடு மாவட்டம், பாசூரையும், நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியையும் இணைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். நாமக்கல்லில் சிறப்பு முட்டை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். ஈரோடு ரயில் நிலையம் முதல் காங்கயம், தாராபுரம், பழனி ரயில் நிலையம் வரை புதிய அகல ரயில் பாதைத் திட்டம் அமைக்கப்படும். ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com