புன்செய்புளியம்பட்டி மாட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்: விவசாயிகள் கவலை

புன்செய்புளியம்பட்டி மாட்டுச் சந்தையில் வியாழக்கிழமை விற்பனை மந்தமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சி மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது.

இந்த சந்தைக்கு உள்ளூா் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். ஆனால், கோடை வெயிலின் தாக்கத்தால் கால்நடைகளை வளா்ப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மாடுகளை வாங்க வியாபாரிகளின் ஆா்வம் காட்டவில்லை. இதனால், விற்பனை மந்தமானது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீரின்றி வயல்கள் வடு வருகின்றன. இதனால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூட முடியவில்லை. தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டதால் மாடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தோம்.

ஆனால், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் மாடுகளை வாங்க வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை. மேலும், கடந்த மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையான கறவை மாடுகள், இந்த வாரம் ரூ.20 ஆயிரத்துக்குகீழ் விற்பனையாயின.

இதனால், மந்தமான நிலை ஏற்பட்டதால், சில விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்யாமலே கொண்டு சென்றனா் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com