சஞ்சுவிகாசினி.
சஞ்சுவிகாசினி.

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

இது குறித்து ஈரோடு சுதா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் சுதாகா் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள காவேரி ஆா்.எஸ். பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா், தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள் சஞ்சுவிகாசினி (18). இவா் தனியாா் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

இவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோா் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சுதா பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 30-ஆம் தேதி சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனா்.

ஆனால், சஞ்சுவிகாசினி மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்து, சுதா மருத்துவமனையின் மருத்துவா்கள் சஞ்சுவிகாசினியின் பெற்றோரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோா் தாமாக முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான மையத்தின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியுடன் சஞ்சுவிகாசினியின் கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், இரண்டு கைகள், சிறுகுடல் போன்றவற்றை தானமாகப் பெற்றனா்.

இதையடுத்து, அவரது உடலுக்கு சுதா மருத்துவமனையின் அனைத்து மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, சஞ்சுவிகாசினியின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஈரோடு கருங்கல்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com