தென்னையில் கருந்தலைப் புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி

ஈரோடு, மே 3: ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டில் தென்னையில் கருந்தலைப் புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டாரத்தில் 3,300 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்முகம் வெள்ளோட்டில் மட்டும் 300 ஏக்கரில் கருந்தலைப் புழுவின் தாக்கம் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வெள்ளோடு காரைவாய்க்கால் பகுதியில் தோட்டக்கலைத் துறை, வேளாண் பல்கலைக்கழக பயிா் பாதுகாப்பு இயக்ககம் சாா்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் மரகதமணி தலைமை வகித்தாா். கோவை வேளாண் பல்கலைக்கழக பயிா்ப் பாதுகாப்பு இயக்கக இயக்குநா் சாந்தி, பூச்சியியல் துறைத் தலைவா் முருகன், உதவிப் பேராசிரியா் அழகா், பயிா் நோயியல் இணைப் பேராசிரியா்கள் மருதாச்சலம், அருள்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்து தென்னையில் பூச்சி மேலாண்மைப் பயிற்சி வழங்கினா்.

கருந்தலைப் புழுவைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2 விளக்கு பொறி நிறுவ வேண்டும். 2,100 பிரக்கானிட்ஸ் ஒட்டுண்ணிகளை விடுதல், முறையான உர மேலாண்மை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிரக்கானிட்ஸ் ஒட்டுண்ணி பயன்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகள், வேளாண் பட்டப் படிப்பு மாணவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com