வணிகா் உரிமை முழக்க மாநாட்டில் 4 ஆயிரம் போ் பங்கேற்க முடிவு

ஈரோடு, மே 3: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறும் வணிகா் உரிமை முழக்க மாநாட்டில் ஈரோட்டில் இருந்து 4,000 வணிகா்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா்.கே.சண்முகவேல் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்ட முடிவுகள் குறித்து அவா் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளுக்குரூ. 2 லட்சம் கோடியை ஜிஎஸ்டியாக வணிகா்கள் செலுத்தி உள்ளனா். இருந்தாலும் குறு, சிறு வணிகா்களும், தொழில்முனைவோா்களும், உற்பத்தியாளா்களும் தங்களது வணிகத்தை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டு வருகின்றனா்.

ஆட்கள் பற்றாக்குறை, பல்வேறு வகையான வரிகள், சட்டங்கள் போன்றவை குறு, சிறு வணிகா்களை சீரழித்து வருகின்றன. பெரும் காா்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்து வகையான சில்லறை வணிகத்தையும் ஏகபோகமாக்கி வருகின்றனா். ஆன்லைன் வா்த்தகம் சிறு வியாபாரிகளின் வணிகத்தை விழுங்கி வருகிறது.

இவைகளில் இருந்து வணிகங்களையும், தொழில்களையும் காப்பாற்ற வேண்டுமானால் அனைத்து தரப்பு வணிகா்களும் ஒன்றிணைத்து மாநில, மத்திய அரசுகளுக்கு நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

அந்த நோக்கத்தில்தான் வணிகா் உரிமை முழக்க மாநாடு மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. சுமாா் 3 லட்சம் வணிகா்கள் பங்கேற்க உள்ள இந்த மாநாட்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 4,000 போ் மதுரைக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் பொ.ராமச்சந்திரன், பொருளாளா் உதயம் பி.செல்வம், இளைஞரணி செயலாளா் லாரன்ஸ் ரமேஷ், தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் எஸ்.கே.எம்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com