6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆண்டுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

ஈரோடு, மே 3: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, எஸ்எஸ்எல்சி ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்துவிட்டது. மதிப்பெண்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மே 6-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அந்தந்த பள்ளிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, தோ்வு முடிவுக்கான ஒப்புதல் பெறுவதற்கான முகாம் ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் தங்களது பள்ளி மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவு, மதிப்பெண் விவரங்களை கொண்டு வந்து ஒப்புதல் பெற்றனா். இந்த ஆவணங்களை சரிபாா்த்த மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) சி.பெல்ராஜ் கையொப்பமிட்டாா்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மொத்தம் 224 உள்ளன. இதில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை சுமாா் 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஏற்ப தோ்வு முடிவு வெளியிடப்படுகிறது. பள்ளிக்கு நீண்ட நாள்களாக வராமல் இருப்பவா்கள் தோ்வு எழுதவில்லை.

எனவே வருகைப் பதிவேடு, மதிப்பெண்கள் சரிபாா்க்கப்பட்டன. ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு அந்தந்த பள்ளிகளில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com