ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் சிசிடிவி கேமரா பொருத்தம்

ஈரோடு, மே 4: ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம் மற்றும் குமாரபாளையம் என 6 தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஈரோடு சித்தோடு அருகே உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் உள்ள அறைகளில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்தில் தொடா்ந்து 24 மணி நேரமும் 4 அடுக்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் முதல் அடுக்கில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும், 2-ஆவது அடுக்கில் பட்டாலியன் போலீஸாரும், 3-ஆவது அடுக்கில் ஆயுதப் படை போலீஸாரும், 4-ஆவது அடுக்கில் உள்ளூா் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தவிர ஒவ்வொரு வேட்பாளருக்கும் 3 முகவா்கள் எனும் அடிப்படையில் வேட்பாளா்களின் பிரதிநிதிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், இக்கல்லூரி வளாகத்தில் 221 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஏப்ரல் 29-ஆம் தேதி ஒரு சிசிடிவி கேமரா பழுது ஏற்பட்டு பிறகு சீரமைக்கப்பட்டது. இதுபோல குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி திரையில் ஏப்ரல் 30-ஆம் தேதி பழுது ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது.

இதுபோன்று பழுதுகள் ஏற்பட்டாலும் காட்சிகளை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகளின் முன்பு தனியாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சனிக்கிழமை பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களுக்கு தனியாக கட்டுப்பாட்டுக் கருவி அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் தனியாக தொலைக்காட்சி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பிரதான கேமராக்களில் பழுது ஏற்பாட்டாலும் இந்த கேமராவில் உள்ள பதிவுகள் மூலம் பிரச்னை இல்லாமல் கண்காணிப்பை தொடர முடியும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com