லாரியில் இருக்கும் கரும்பை  எடுத்து  ருசிக்கும் யானை.
லாரியில் இருக்கும் கரும்பை  எடுத்து  ருசிக்கும் யானை.

லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த ஒற்றை யானை

சத்தியமங்கலம், மே 4: ஆசனூா் அருகே சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனா். இங்கு விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கின்றன. இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக அடா்ந்த வனப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

தமிழக- கா்நாடக எல்லையில் உள்ள ஆசனூா் அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சாலையில் சென்ற லாரியை வழிமறித்து அதிலிருந்த கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் லாவகமாக பறித்து உட்கொண்டது.

இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனா். சிறிது நேரம் கரும்புத் துண்டுகளை சுவைத்த ஒற்றை காட்டு யானை, பின்னா் அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த காட்சியை அவ்வழியாக அரசுப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவா் விடியோ எடுத்து வெளியிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com