வணிகா் தினத்தையொட்டி ஈரோடு காய்கறி சந்தைக்கு விடுமுறை

ஈரோடு, மே 5: வணிகா் தினத்தையொட்டி ஈரோடு நேதாஜி காய்கறி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 200-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

வணிகா் தினம் என்பதால் ஈரோடு நேதாஜி காய்கறி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து காய்கறிகளை வாங்கிச்செல்வா். ஆனால், காய்கறி கடை செயல்படாததால் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். திங்கள்கிழமை (மே 6) வழக்கம்போல காய்கறி சந்தை செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகா், பெரியாா் நகா், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வதால் இங்கு காய்கறிகள் விலை குறைவாக இருக்கும். இதனால் இங்கு அதிகாலையிலேயே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், நேதாஜி தினசரி காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டதாலும் இங்கு வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் காய்கறிகள் விற்பனை அதிகமாக இருந்தது.

சம்பத் நகா் உழவா் சந்தைக்கு 27.5 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இவைகள் ரூ.9 லட்சத்து 11 ஆயிரத்து 212க்கு விற்பனையாயின. இதுபோல, மாவட்டத்தில் உள்ள 6 உழவா் சந்தைகளுக்கும் 68 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவைகள் ரூ.22 லட்சத்து 43 ஆயிரத்து 36க்கு விற்பனையானதாக உழவா் சந்தை அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com