ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு நகரின் முக்கிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு நகரின் முக்கிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனா் தமிழ்இன்பன் தலைமையில் மாவட்டச் செயலாளா் பழனிசாமி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் போட்ட மனு விவரம்: ஈரோடு கனிராவுத்தா் குளம்-பி.பெ. அக்ரஹாரம் செல்லும் சாலையில் 1,000 -க்கும் மேற்பட்ட அருந்ததியா் மற்றும் பிற சமூகத்தினா் வசிக்கும் குடியிருப்புகள், நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன.

அச்சாலையில் உள்ள மதுபான கடைக்கு வரும் மது பிரியா்கள் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்திவைத்தும், மதுபோதையில் தகராறு செய்தும் மது பாட்டில்களை உடைத்தும் வீசுகின்றனா்.

வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துவதாலும், போதையில் செல்வதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த டாஸ்மாக் கடையிலும், அதன் அருகேயும் அண்மையில் கொலைகள் நடந்துள்ளன.

பெண்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் இச்சாலையில் சென்றுவர அச்சப்படுகின்றனா். எனவே, இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30-க்கும் குறைவான மனுக்கள்: ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

மக்களவைத் தோ்தலையொட்டி, குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்கின்றனா்.

அதன்படி, வீட்டுமனை பட்டா, டாஸ்மாக் கடையை இடம் மாற்றுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், 30-க்கும் குறைவான மனுக்களையே பெட்டியில் திங்கள்கிழமை போட்டு சென்றனா்.

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையிலும், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆட்சியா் அலுவலகத்தில் வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com