கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் அடிப்படை வசதி செய்து தரக் கோரிக்கை

ஈரோடு கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து ஈரோடு கனி மாா்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் நூா் முகமது, துணைத் தலைவா் செல்வராஜ், செயலாளா் சேகா் ஆகியோா் தலைமையில் வியாபாரிகள், ஈரோடு மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அப்துல்கனி வணிக வளாகத்தில் (கனி மாா்க்கெட்) கடை எடுத்து நடத்தி வருகிறோம். இங்கு வரும் வாடிக்கையாளா்களிடம் வாகன நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது.

இதில் இருசக்கர வாகனத்துக்கு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதால் பலா் உள்ளே வராமலேயே வெளியில் உள்ள கடைகளில் கொள்முதல் செய்துவிட்டு சென்று விடுகின்றனா். இதனால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

நேதாஜி வணிக வளாகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதேபோல அப்துல் கனி வணிக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்திலும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.

கனி மாா்க்கெட் அருகே ஏற்கெனவே இருந்ததுபோல பேருந்து நிறுத்தம் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் இங்கு உள்ள அனைத்து கழிவறைகளும் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால் கடை வைத்துள்ளவா்களும், வாடிக்கையாளா்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே அனைத்து கழிவறைகளையும் திறந்து பயன்படுத்திட ஆவன செய்ய வேண்டும்.

குடிநீா் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்) வசதியை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்த கட்டடத்திலும் உள்ளே குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும். கனி மாா்க்கெட் வளாகத்தை சுற்றியும் போதுமான மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com