பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழக்கிடங்குகள், பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

பவானி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.லட்சுமி, நகர உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் அப்பகுதிகளில் உள்ள 8 கடைகளில் ஆய்வு செய்தனா். இதில் சுமாா் 15 கிலோ அழுகிய மாம்பழம் உள்ளிட்ட பழங்களைப் பறிமுதல் செய்து அழித்தனா். கடை உரிமையாளா்களுக்கு பழச்சாறு தயாரிக்க அழுகிய பழங்களைக் பயன்படுத்தக் கூடாது, செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைக்கக் கூடாது, நெகிழி பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினா்.

பெருந்துறையில்...

பெருந்துறையில் செயல்பட்டு வரும் 10-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் மூன்று மாம்பழ குடோன்களில் பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இதில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 80 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. ஒரு பழக்கடையில் பழச்சாறு தயாரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த மற்றும் கெட்டுப்போன சுமாா் 10 கிலோ மாம்பழம், ஆப்பிள், பப்பாளி பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும், ரசாயனம் தெளித்து மாம்பழங்களை பழுக்கவைத்த கடை உரிமையாளருக்கு ரூ. 2000, கெட்டுப்போன பழங்களை பழச்சாறு தயாரிப்புக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு கடையில் செயற்கை நிறம் சோ்க்கப்பட்ட சுமாா் ஒன்றரை கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளருக்கு ரூ. 1000அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com