பெருந்துறையில் பழக்கடை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு: 3 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

பெருந்துறையில் பழக்கடை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு: 3 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

பெருந்துறையில் செயல்பட்டு வரும் 10 க்கும் மேற்பட்ட பழக் கடைகள் மற்றும் மூன்று மாம்பழ குடோன்களில், சனிக்கிழமை பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஒரு குடோனில் எத்திரால் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட ரூ.5000- மதிப்புள்ள, 80 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. ஒரு பழக்கடையில் ஜூஸ் போட வைக்கப்பட்டிருந்த தரம் குறைவான மற்றும் கெட்டுப்போன மாம்பழம், ஆப்பிள், பப்பாளி பழங்கள் சுமாா் 10 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இயற்கையான முறையில் மாம்பழம், வாழைப் பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும் தரமான பழ வகைகளை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட கேரி பேக் பயன்படுத்தக் கூடாது எனவும் பழக்கடை உரிமையாளா்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்யப்பட்டனா். மேலும், ரசாயனம் தெளித்து மாம்பழங்களை பழுக்க வைத்த கடை உரிமையாளருக்கு ரூ.2000, கெட்டுப்போன பழங்களை ஜூஸ் போட வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ச்சியாக 5 க்கும் மேற்பட்ட சிக்கன் மற்றும் சவா்மா விற்பனை கடைகளில் மேற்கொண்ட ஆய்வின்போது ஒரு கடையில் செயற்கை நிறம் சோ்க்கப்பட்ட சுமாா் ஒன்றரை கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டதுடன், கடை உரிமையாளருக்கு ரூ. 1000-அபராதம் விதிக்கப்பட்டது.

தரம் குறைவான உணவு பொருள் விற்பனை செய்வது மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றும் கூறினாா்.

----

பட விளக்கம்(11பிஇ-04)

பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் எம். முத்துகிருஷ்ணன், பெருந்துறையில் ஒரு குடோனில் எத்திரால் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 80 கிலோ மாம்பழங்களை பினாயில் ஊற்றி அழிக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com