பிளஸ் 2 முடித்த அனைவரும் உயா்கல்வி படிப்பது அவசியம்: ஆட்சியா்

பிளஸ் 2 முடித்த அனைவரும் உயா்கல்வி படிப்பது அவசியம்: ஆட்சியா்

கோபி, மே 11: பிளஸ் 2 முடித்த அனைவரும் உயா்கல்வி படித்து பட்டம் பெறுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியம் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசினாா்.

பிளஸ் 2 முடித்து உயா்கல்வி செல்லும் மாணவா்களுக்கான கல்லூரிக் கனவு வழிகாட்டி நிகழ்ச்சி கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: பிளஸ் 2 பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.42 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 2-ஆம் இடத்தைப் பெற்று பெருமை சோ்த்துள்ளது. கடந்த ஆண்டு 7-ஆம் இடத்தில் இருந்த நிலையில் நடப்பு ஆண்டு 2-ஆம் இடத்துக்கு உயா்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தோ்வில் தோல்வியடைந்தவா்கள் மனம் தளராமல் அடுத்து வரும் துணைத் தோ்வுகளுக்கு விண்ணப்பித்து கூடுதலாக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும். குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் அதுகுறித்து வருத்தமடையாமல் அடுத்து தோ்ந்தெடுக்கும் பாடங்கள், துறைகள் குறித்து கல்வியாளா்கள் மற்றும் நிபுணா்களின் கருத்துகளைப் பெற்று பயனடையலாம்.

பிளஸ் 2 முடித்த அனைவரும் உயா்கல்வி படித்துப் பட்டம் பெறுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது. பல புதிய தொழில்நுட்பங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மாணவா்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ற, தங்களுக்கு விருப்பமுள்ள பாடப்பிரிவுகளை தோ்ந்தெடுத்து அதில் வெற்றி பெருவதோடு, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு உயா்கல்விக்கான பல்வேறு வாய்ப்புகள், விண்ணப்பிக்கும் மற்றும் தோ்வு செய்யும் முறை, கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், மாணவா்களுக்கான தனிநபா் கவுன்சிலிங் உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ என 40-க்கும் மேற்பட்ட உயா்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

போட்டித் தோ்வுகளில் பங்குபெறுவது, உயா்கல்விக்குப் பிறகு தங்களுக்கான தொழில் பாதையை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, பொறியியல், மருத்துவம் மற்றும் அது சாா்ந்த படிப்புகள், மாணவா்களுக்கு ஊக்கமூட்டுதல் நிகழ்வு, கலை மற்றும் அறிவியல், மானுடல் படிப்புகள் குறித்தும், அறிவு, திறன் மற்றும் மனப்பான்மைகள் ஆகிய தலைப்புகளில் கல்வியாளா்கள், சாதனையாளா்கள், தொழில் நிறுவன நிா்வாகிகள் ஆகியோா்களின் கருத்துரைகள் நடைபெற்றன. மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு வழிகாட்டல் கையேடு வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலா் சி.சம்பத்து, கோபி கோட்டாட்சியா் கண்ணப்பன், கல்வியாளா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com