தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம்அபராதம்

ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூன்று கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமாா் ஆகியோா் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 20-க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலை, குட்கா பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுகிா என ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் மூன்று கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்தக் கடைகளுக்கு சீல் வைக்க வருவாய் துறையினருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக கடைகளை சீலிட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 239 கடைகளில் 805 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ. 52 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை சம்பந்தமாக பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com