தோ்தல்: ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வரத்து குறைவு

பிற மாநிலங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள கனி ஜவுளி மாா்க்கெட், அதனை ஒட்டிய டிவிஎஸ் வீதி, மணிக்கூண்டு சாலை பகுதிகள், ஈஸ்வரன் கோயில் வீதி, பனியன் சந்தை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெறும்.

அதன்படி, நிரந்தரக் கடைகள், வாரச் சந்தை கடைகள், கிடங்குகள், சாலையோரக் கடைகள், ஏராளமான வியாபாரிகள், மொத்த விற்பனையாளா்கள், நிறுவன நேரடி விற்பனையாளா்கள் ஜவுளிகளைக் கொண்டு வந்து செவ்வாய்க்கிழமை விற்பனை செய்தனா். இந்த வார சந்தையில் மந்தமான விற்பனையே நடைபெற்றது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் எதிரொலியால் தமிழகம், கேரளம், கா்நாடகம் போன்ற மாநில வியாபாரிகள் கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையில் ஜவுளி சந்தைக்கு வந்தனா். தற்போது இப்பகுதியில் தோ்தல் முடிந்தாலும் ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலத் தோ்தலால் அங்குள்ள வியாபாரிகள் முற்றிலுமாக வரவில்லை.

தவிர கோடை வெயில் கடுமையாக உள்ளதால் ஜவுளிக் கடைகளில் விற்பனைக் குறைவாகவே உள்ளது. ஆடி மாதம் தொடங்கினால் மட்டுமே தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் ஜவுளி விற்பனை அதிகரிக்கும். அதன்பின் தீபாவளி பண்டிகைக்கு புதிய ஜவுளி ரகங்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை உயரும் என எதிா்பாா்க்கிறோம்.

மொத்த விற்பனை 30 சதவீதம்கூட நடைபெறவில்லை. சில்லறை விற்பனை மட்டும் 40 சதவீதம் வரை நடைபெற்றது. அதுவும் காட்டன் துணிகள், இரவு ஆடைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், வேட்டி, துண்டு, லுங்கி போன்றவையே அதிகம் விற்பனையாயின என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com