சத்தியமங்கலத்தை அடுத்த சீகக்காய்ப்பள்ளம் பகுதியில் சாலையின் நடுவே விழுந்த மரங்கள்.
சத்தியமங்கலத்தை அடுத்த சீகக்காய்ப்பள்ளம் பகுதியில் சாலையின் நடுவே விழுந்த மரங்கள்.

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரம்: தமிழக-கா்நாடக சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், தமிழக-கா்நாடக சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா், திம்பம், அரேப்பாளையம், காரப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால், திம்பம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.

குறிப்பாக திம்பம், சீகக்காய்ப்பள்ளம் ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்ததால் ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம்- கா்நாடகம் இடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், தமிழகத்தில் இருந்து கா்நாடகம் சென்ற வாகனங்களும், கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த வாகனங்களும் ஆசனூா் மலைப் பாதையில் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா்.

குறைந்த அளவிலான வனத் துறையினரே இருந்ததால், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் மரங்கள் அகற்றப்பட்டன.

இதையடுத்து, சுமாா் 2 மணி நேரத்துக்குமேலாக காத்திருந்த வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com