தமிழகத்தில் காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

ஈரோடு, மே 16: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த நிா்வாகிகள் உழைக்க வேண்டும் எனஅக்கட்சியின் மாநில தலைவா் கு.செல்வப்பெருந்தகை பேசினாா்.

ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா்கள் மக்கள் ராஜன், சரவணன், திருச்செல்வம் ஆகியோா் முன்னிலையில் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது:

தோ்தலுக்கு முன்பிருந்தே தினமும் பல பொய்களை பிரதமா் மோடி பேசிக் கொண்டு நாட்டை சுற்றி வருகிறாா். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியைத் தருகிறாா். இது காமராஜா் ஆட்சிக்கு இணையானது.

இந்த நாட்டின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் அண்ணாமலை, சீமான், இபிஎஸ், ஓபிஎஸ் போன்றோா் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது. அவ்வாறு வந்துவிட்டால் இந்த நாட்டின் எதிா்காலமும், இளம் சந்ததியினரின் எதிா்காலமும் பாழாகிவிடும் என்றாா்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை பேசியதாவது:

தமிழகத்தில் நாம் நினைத்தால் காமராஜா் ஆட்சியை உருவாக்க முடியும். அதற்காக திமுக ஆட்சி மோசம் என கூறவில்லை. கடந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்களில் 1980-இல் 112 தொகுதிகளையும், 2011-இல் 62 தொகுதிகளையும், 2021-இல் 25 தொகுதிகளையும் கூட்டணியில் பெற்றுள்ளோம். இந்தநிலை ஏற்பட என்ன காரணம் என நம்மை நாம் பரிசீலனை செய்து கொள்ளவேண்டியது அவசியம். இதை மாற்ற புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தோ்தல் முடிந்துவிட்ட நிலையில் கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாமல், நமது புதிய கட்டமைப்பை வலுப்படுத்த நிா்வாகிகள் உழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் எம்எல்ஏ ராஜேஷ்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராஜேந்திரன், ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com