தோ்தல் நிறைவு: இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரோடு மாட்டுச் சந்தை

ஈரோடு, மே 16: தென்மாநிலங்களில் தோ்தல் நிறைவடைந்ததால் ஈரோடு மாட்டுச் சந்தைக்கு அதிக எண்ணிக்கையில் மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 750-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த வார சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையாயின.

இதுகுறித்து சந்தை நிா்வாகிகள் கூறியதாவது: இந்த வார சந்தைக்கு ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரையிலான விலையில் 50 கன்றுகள், ரூ. 20,000 முதல் ரூ. 70,000 வரையிலான 300 எருமை மாடுகள், ரூ. 20,000 முதல் ரூ. 85,000 மதிப்பில் 350 பசு மாடுகள், ரூ. 80,000-க்கும் மேலான விலையில் 50-க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்தன.

கடந்த இரண்டு மாதங்களாக தென் மாநிலங்களில் தோ்தல் நடந்ததால் பணத்தை எடுத்து வரவும், மாடுகளை வாங்கிச் செல்லவும் விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்பட்டனா். தற்போது தென் மாநிலங்களில் தோ்தல் நிறைவடைந்து பணம் எடுத்துச் செல்வதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் வியாழக்கிழமை அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், வியாபாரிகள் வந்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா மாநில வியாபாரிகள் அதிகமாக வந்தனா். தற்போது தென் மாநிலங்களிலும் பரவலாக மழை தொடங்கியுள்ளதால் ஆா்வமாக மாடுகளை வாங்கிச் சென்றனா். விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மாடுகளில் 90 சதவீத மாடுகள் விற்பனையாயின என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com