14 ஊராட்சிகளில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை: ஆட்சியா்

14 ஊராட்சிகளில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை: ஆட்சியா்

கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

ஈரோடு, மே 16: ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 14 ஊராட்சிகளில் சீமைக் கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

உயா்நீதிமன்ற தீா்ப்பின்படியும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசாணையின் படியும் ஈரோடு மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:

சீமைக் கருவேல மரங்களை முழுவதும் அகற்றும் வகையில் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒரு கிராம ஊராட்சி வீதம் 14 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அந்த ஊராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் முழுவதையும் அனைத்து துறையினரும் இணைந்து அகற்ற வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்ற தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்த வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும் இடங்களில் புதிதாக மரக்கன்றுகளை நட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) என்.மணீஷ், மாவட்ட வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், வேளாண் துணை இயக்குநா் முருகேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சோ.உமாசங்கா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கோ.துவாரகநாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com