வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

ஈரோடு, மே 15: ஓய்வூதியா்கள், அரசு ஊழியா்களின் வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளைத் திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட கருவூல அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் மாவட்ட கருவூல அலுவலா் சேஷாத்ரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. உதவிக் கருவூல அலுவலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், சங்க நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: வருமான வரித் துறை உத்தரவுப்படி, கருவூலத் துறை ஆணையா் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அதில் புதிய, பழைய வருமான வரி பிடித்தம் என்ற பெயரில் எவ்வித முன்னறிவிப்பு, ஆலோசனையின்றி தமிழகத்தில் மட்டும் ஓய்வூதியா்கள், அரசு ஊழியா்களிடம் ரூ.1,000 கோடி வருமான வரி என்ற பெயரில் பிடித்தம் செய்ததாக வந்த தகவலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

ஆண்டுக்கு ரூ.62,000 -க்குமேல் ஓய்வூதியம் பெறுவோருக்கு புதிய வருமான வரி பிடித்தமும், ரூ.45,000 -க்குமேல் ஓய்வூதியம் பெறுவோருக்கு பழைய வருமான வரி பிடித்தம் செய்வதும்,

மே 15 -ஆம் தேதிக்குள் தங்களது பான் அட்டையை கருவூலத்தில் பதிவு செய்யாதவா்களில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் ஓய்வூதியம் பெறுவோா் இரட்டை வருமான வரி செலுத்த வேண்டும் எனக் கூறுவதும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த உத்தரவுகளைத் திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com