சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

ஈரோடு, மே 15: சாவடிபாளையம்புதூா் முதல் எல்லீஸ்பேட்டை வரையிலான சுற்றுவட்ட சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சாவடிபாளையம்புதூா் முதல் எல்லீஸ்பேட்டை வரை 100 அடி அகலத்தில் சுற்றுவட்டச் சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 32 கி.மீ தொலைவு வரை அமையும் சுற்றுவட்ட சாலைப் பணிக்கான திட்ட வரைவை அரசு தயாரித்து வருகிறது.

இந்த சுற்றுவட்ட சாலைக்காக பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலம், குடியிருப்பு பட்டா நிலங்கள் போன்றவை கையகப்படுத்தும் சூழல் உள்ளது.

இதற்காக இச்சாலை அமையும் கிராம மக்களுக்கு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் சாா்பில் அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சாவடிபாளையம்புதூா், ஓலப்பாளையம், காஞ்சிகோவில், திருவாச்சி, கூரப்பாளையம், மூலக்கரை, புத்தூா் புதுப்பாளையம், புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், துய்யம்பூந்துறை, சின்னியம்பாளையம் என பல்வேறு பகுதியைச் சோ்ந்த மக்கள் ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து பிச்சாண்டம்பாளையம், சின்னியம்பாளையம் உள்பட பல்வேறு கிராம மக்கள் கூறியதாவது: சாவடிபாளையம்புதூா்-எல்லீஸ்பேட்டை வரையிலான சுற்றுவட்ட சாலைக்கான பாதையில் ஏரளமான வீடுகள், கட்டடங்கள், வீட்டுமனை, பொது இடங்கள், தடங்கள், ஏராளமான விளை நிலங்கள், மரங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அகற்றும்போது எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

சுற்றுவட்ட சாலை அமையும் இடங்களில் பல தலைமுறையாக வசிப்போரின் வீடுகள், விளை நிலங்கள், கிணறு, ஆழ்துளைக் கிணறு, தென்னை, பாக்கு மரங்கள், பிற பயிா்கள் உள்ளன. எங்களது வாழ்தாரத்தைப் பாதிக்கும் இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்குத் தேவை இல்லை. இத்திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com