புன்செய் புளியம்பட்டியில் புதிய தாா் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்
புன்செய் புளியம்பட்டி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள தாா் சாலையை சாலையை சீரமைத்து புதிய தாா் சாலை அமைக்கக் கோரி 100க்கும் மேற்பட்டோா் பொதுமக்கள் சத்தி இணைப்பு சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நேரு நகா் பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலை உள்ளது.
இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தாா் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், புதிய தாா் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் பவானிசாகா் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து மறியலில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், மழைக் காலங்களில் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகி வருன்றனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக புதிய தாா் சாலை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினா்.
இத குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புன்செய் புளியம்பட்டி போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற மறியலால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.