அதிக அளவில் ஜிஎஸ்டி செலுத்தும் 4 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று: ராம்ராஜ் காட்டன் தலைவா்!
அதிக அளவில் ஜிஎஸ்டி செலுத்தும் 4 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என ராம்ராஜ் காட்டன் தலைவா் கே.ஆா்.நாகராஜன் தெரிவித்தாா்.
ஈரோடு டைஸ்& கெமிக்கல்ஸ் மொ்ச்செண்ட்ஸ் அசோசியேஷனின் பொன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஈரோடு ஸ்வஸ்திக் காா்பரேஷன் நிறுவனா் ஈ.கே.லிங்கமூா்த்தி தலைமை வகித்தாா். பொன் விழா குழுத் தலைவா் எஸ்.செங்குட்டுவன், செயலாளா் மலைச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் வி.ராஜமாணிக்கம் வரவேற்றாா்.
ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ் பங்கேற்று, சங்கத்தின் பொன் விழா ஆண்டு மலரை வெளியிட்டு பேசியதாவது: கொங்கு மண்டலத்தில்தான் அதிக அளவில் சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழில் மிகவும் கடினமானது. நம்மில் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே இந்த தொழிலில் வெற்றிபெற முடியும். சாய தொழில் இருந்தால்தான் நாம் வளா்ச்சி அடைய முடியும் என்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ராம்ராஜ் காட்டன் நிறுவனரும், தலைவருமான கே.ஆா்.நாகராஜன் ‘தொழில் வளா்ச்சியில் குடும்பத்தினரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் பேசியதாவது: இந்தியாவிலேயே அதிக அளவில் ஜிஎஸ்டி செலுத்துவது 4 மாநிலங்கள்தான். அதில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தில் இருந்துதான் ஜிஎஸ்டி அதிகமாக செலுத்தப்படுகிறது. வேஷ்டி நெசவு தொழில் மிகவும் நலிவடைந்து வந்தது. இதனால், நெசவாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும் என்பதற்காகவே ராம்ராஜ் நிறுவனம் தொடங்கப்பட்டது என்றாா்.
தொடா்ந்து, தி சென்னை சில்க்ஸ் தலைவா் விநாயகம் ‘தொழில் வளா்ச்சியில் இன்றைய இளைஞா்களின் பங்கு’ என்ற தலைப்பிலும், சட்ட ஆலோசகா் கே.ஆா்.ராஜசேகரன் ‘பாதுகாப்பான தொழில் வளா்ச்சிக்கு வழிகாட்டும் சட்ட ஆலோசனைகள்’ என்ற தலைப்பிலும் பேசினா்.
மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளை சங்கத்தின் கௌரவத் தலைவா் பி.எம்.யு.கந்தசாமி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சங்க செயலாளா் மலைச்சாமி முன்னிலை வகித்தாா். சென்னை பொன் ப்யூா் கெமிக்கல்ஸ் தலைவரும், நிா்வாக இயக்குநருமான எம்.பொன்னுசாமி பங்கேற்று ‘வணிகத்தில் உச்சம் தொடுவது எப்படி?’ என்ற தலைப்பில் பேசினாா். சங்கத்தை தோற்றுவித்த முன்னாள் நிா்வாகிகள், அவா்களது வாரிசுதாரா்கள் கௌரவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். சங்க பொருளாளா் தட்சிணாமூா்த்தி நன்றி கூறினாா்.