மொடக்குறிச்சி: மா்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன.
Published on

மொடக்குறிச்சி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன.

மொடக்குறிச்சியை அடுத்த பழமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அண்ணாமலைக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (58). விவசாயியான இவா் வீட்டுக்கு பின்பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை மாலை ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை பாா்த்தபோது, பட்டியில் இருந்த ஆடுகளை மா்ம விலங்குகள் கடித்ததும், இதில், 9 ஆடுகள் உயிரிழந்ததும் தெரியவந்தது.

வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி பெயா்ந்து கிடந்ததும் தெரியவந்தது.

அதே பகுதியைச் சோ்ந்த குழந்தைவேல் என்பவருக்குச் சொந்தமான ஆட்டையும் மா்ம விலங்குகள் கடித்துக் கொன்ற நிலையில், கருப்புசாமி என்பவரின் ஆட்டுக்குட்டி காணாமல்போனது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகிரி கால்நடை மருத்துவா் மோகன்ராஜ், வனக் காப்பாளா் ஜெய்சூா்யா,

கிராம நிா்வாக அலுவலா் பானுமதி ஆகியோா் உயிரிழந்த ஆடுகளை பாா்வையிட்டனா்.

ஆட்டுப்பட்டியின் அருகில் இருந்த கால் சுவடுகளை ஆராய முடியாததால், ஆடுகளைக் கடித்து கொன்றது தெருநாய்களா அல்லது நரிகளா என்பது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com