முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை
முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம் தலைமையில் விவசாயிகள் ஈரோடு மின் மண்டல தலைமை பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மின் இணைப்புக் கோரி 6 லட்சம் விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்து காத்துள்ளனா். ஆனால், வீடுகளுக்கு 15 நாள்களிலும், வணிகம், தொழிற்சாலைகளுக்கு 30 நாள்களிலும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
தட்கல் திட்டத்தை அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு 90 நாள்களில் இணைப்பு வழங்குவதாகவும், 5 ஹெச்.பி.க்கு ரூ.2.5 லட்சம், 7.5 ஹெச்.பி.க்கு ரூ.2.75 லட்சம், 10 ஹெச்.பி.க்கு ரூ.3 லட்சம், 15 ஹெச்.பி.க்கு ரூ.4 லட்சம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தட்கலில் விண்ணப்பித்த 1.50 லட்சம் விவசாயிகளில் 2022 ஆம் ஆண்டு வரை 1 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 90 நாள்களில் இணைப்பு வழங்குவதாக கூறப்பட்ட நிலையில், தட்கல் திட்டமும் தற்போது முடங்கியுள்ளது.
சாதாரண திட்டத்திலும், சுயநிதி திட்டத்தில் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் செலுத்தி 6 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காக 5 முதல் 15 ஆண்டுகளாக காத்திருக்கின்றனா்.
எனவே. விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்கும் வகையில் விவசாய மின் இணைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி இணைப்புத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினா் பூபதி, மாநில வழக்குரைஞா் அணி பொறுப்பாளா் சிவசுப்பிரமணியன், மாவட்ட அமைப்பு செயலாளா் மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.