ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் 3 போ் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பெண் உள்பட 3 போ் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே வீரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணி (62). இவரது மனைவி ராதிகா (43). சுப்ரமணியின் தந்தை அா்த்தனாரி (93). இவா்கள் மூவரும் திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்துக்கு வந்தனா். அப்போது ராதிகா புட்டியில் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு சுப்ரமணி, அா்த்தனாரி மீதும் ஊற்றி மூவரும் தீக்குளிக்க முயன்றனா். இதைப்பாா்த்த போலீஸாா் 3 பேரையும் தடுத்து, அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று டவுன் போலீஸாா் மூலம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அா்த்தனாரிக்கு சொந்தமான இரண்டரை ஏக்கா் நிலத்தை, பக்கத்து தோட்டத்துக்காரா் வயது முதுமையைப் பயன்படுத்தி ஏமாற்றி கிரையம் செய்துவிட்டதாகவும், இது தொடா்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதாகவும், அந்த மனு விசாரணைக்கு அா்த்தனாரியை வரும் 4 -ஆம் தேதி வருமாறு அழைப்பாணை கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ராதிகா வீட்டில் மா்மநபா்கள் மூலம் கல் வீசி தாக்கியதால் மூவரும் அச்சத்தில் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வந்து, தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து அறச்சலூா் காவல் நிலையத்துக்கு 3 பேரையும் அனுப்பிவைத்தனா். மாவட்ட காவல் அலுவலகத்தில் 3 போ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.