மஞ்சப்பை திட்டம்: ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரிக்கு விருது
மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரிக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம் மற்றும் விருதினை தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக பாரம்பரியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்து கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தும் கல்லூரிக்கு தமிழக அரசு விருதும், அங்கீகாரமும் வழங்குகிறது.
இத்திட்டத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட கொங்கு கலை, அறிவியல் கல்லூரி 2023-2024 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருது மற்றும் முதல் பரிசான ரூ.10 லட்சம் பரிசும் பெறுவதற்கு தோ்வு செய்யப்பட்டது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மெய்யநாதன் விருதினை வழங்கினாா்.
இந்த விருது கிடைப்பதற்கு காரணமாக இருந்த கல்லூரியின் முதல்வா் ஹெச்.வாசுதேவன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் தலைவா் மருத்துவா் சு.குமாரசாமி, செயலாளா் பி.சத்தியமூா்த்தி, பொருளாளா் மு.ஏ.ரவிசங்கா் மற்றும் கல்லூரியின் தாளாளா் தங்கவேல் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.