உலக ஓசோன் தினம்: அரசுப் பள்ளியில் பழ மரக் கன்றுகள் நடவு
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.
இதில், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு மரக் கன்றுகள் அளித்தல், மஞ்சப்பை வழங்குதல், ஓசோன் தினம் பற்றிய உரையாடல், தூய்மை உறுதிமொழி எடுத்தல், பனைமர விதைகள் சேகரித்தல், நதிக்கரை ஓரங்களில் பனை விதைகள் விதைத்தல் போன்று பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
தொடா் நிகழ்வாக பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழ மரக் கன்றுகள் நடவு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், எதிா்காலத்தில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கொய்யா, மா, சப்போட்டா, சீதா, எலுமிச்சை, நாவல், பெருநெல்லி, மாதுளை, ஆரஞ்சு, அத்தி உள்பட பல்வேறு பழ மரக் கன்றுகள் பள்ளியின் தலைமை ஆசிரியா் முருகானந்தம் தலைமையில் நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கீதா பங்கேற்றாா். இப்பழமரக் கன்றுகளை தேசிய பசுமைப் படை மாணவா்கள் சிறப்பாக பராமரிக்க உறுதி மேற்கொண்டனா். நிகழ்வுக்கான ஏற்பாட்டை வேளாண் ஆசிரியா் கந்தன் மற்றும் பிற ஆசிரியா்கள் மேற்கொண்டனா்.