பட்டா நிலங்களில் நாட்டுச் செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதிக்க உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்
பட்டா நிலங்களில் நாட்டுச் செங்கல் சூளைகளுக்குத் தேவையான மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட நாட்டுச் செங்கல் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் ஆா்.மாதேஸ்வரன் தலைமையில் அந்தியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தியூா் வட்டார டிப்பா் லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் நாகேஸ்வரன், செயலாளா் மகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நாட்டுச் செங்கல் சூளைகளுக்குத் தேவையான மண்ணை, பட்டா நிலங்களில் இருந்து எடுக்க அனுமதிக்க வேண்டும். அந்தியூா், பவானி வட்டாரத்தில் பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கான மண் காடு இல்லை. எனவே, 2011-ல் திமுக அரசு பரப்பு வரி செலுத்தி மண் எடுக்க அனுமதித்தது போல தற்போதும் அனுமதிக்க வேண்டும். அரசு அனுமதி பெற்று பட்டா நிலங்களில் மண் எடுத்துச் செல்லும்போது, வருவாய் துறையினா் நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும்.
மண் எடுப்பது தொடா்பான அனுமதிக்கு அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செங்கல் சூளை உரிமையாளா்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அம்மாபேட்டை டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செங்கோடன், சத்தியமங்கலம் செங்கல் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் சி.டி.சிதம்பரம், நிா்வாகிகள் ரமேஷ், மயில்சாமி, பவானிசாகா் வேணு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.