1.20 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

பா்கூா் மலைப் பாதை வழியாக மினி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 1.20 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
Published on

கா்நாடக மாநிலத்தில் இருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக மினி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 1.20 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லேகால் - அந்தியூா் மலைப் பாதையில் பா்கூா் மயானம் அருகே பா்கூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கா்நாடக மாநிலத்திலிருந்து வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் சா்க்கரை மூட்டைகளுக்கு மத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரியில் இருந்த இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில் அவா்கள் லாரி ஓட்டுநரான சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்த லோகநாதன் மகன் விக்னேஸ்வரன் (31), லாரி உரிமையாளா் நடராஜ் மகன் ஸ்ரீநாத் (31) என்பதும், இருவரும் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரிலிருந்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்களைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து லாரியில் 129 மூட்டைகளில் இருந்த 1,220 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com