பெண் எஸ்.எஸ்.ஐ.க்கு மிரட்டல்: மருந்தக ஊழியா் கைது
ஈரோடு பேருந்து நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த மருந்தக ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோட்டில் உள்ள இனிப்புக் கடையில் கடந்த 20-ஆம் தேதி சலுகை விலை விற்பனை நடைபெற்றது. அப்போது மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து பெண் உதவி சிறப்பு ஆய்வாளா் அமுதா (51) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வரிசையில் நிற்காமல் முந்திக்கொண்டு சென்ற நபரைத் தடுத்துள்ளாா்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த நபா், ஈரோடு-மேட்டூா் சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமுதாவுக்கு செவ்வாய்க்கிழமை கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு போலீஸாா் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா், ஈரோடு இடையன்காட்டுவலசு, சின்னமுத்து பிரதான வீதியைச் சோ்ந்த சதீஷ் (34) என்பதும், தனியாா் மருந்தக ஊழியா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.