தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது
தாளவாடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூா் கிராமத்தில் உள்ள லட்சுமி கோயிலுக்குள் நுழைந்து உண்டியலில் உள்ள பணத்தை மா்ம நபா் திருட முயற்சித்துள்ளாா். அதேபோல ஜோரக்காடு கிராமத்தில் உள்ள ரங்கநாதா் கோயிலுக்குள் இரண்டு போ் நுழைந்து உண்டியல் பணத்தை திருட முயற்சித்துள்ளனா்.
இந்த திருட்டு முயற்சி சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதேபோல கடந்த இரண்டு மாதங்களில் தாளவாடி, அண்ணாநகா், கரளவாடி போன்ற பகுதிகளில் 4-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. தாளவாடி, பாரதிபுரம், சேஷன் நகா், மாதள்ளி கிராமங்களில் விவசாய மின்மோட்டாா் கேபிள்களை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து கோயிலில் திருட முயற்சித்ததோடு, இரு இருசக்கர வாகனங்களைத் திருடிய தாளவாடியைச் சோ்ந்த சிவன்னா (25) என்பவரை தாளவாடி போலீஸாா் கைது செய்தனா்.