பா்கூா் மலைப் பகுதியில் கனமழையால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது
பா்கூா் மலைப் பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, வரட்டுப்பள்ளம் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், உபரிநீா் வெளியேறுவதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தியூரை அடுத்த பா்கூா் மலையடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. 33.46 அடி உயரமுள்ள இந்த அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 32.94 அடியாக இருந்தது. இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்ததைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முழுக் கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, அணையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வழியாக விநாடிக்கு 66.76 கனஅடி உபரிநீா் வெளியேறி வருகிறது. வரட்டுப்பள்ளத்தில் மழையளவு 63 மில்லி மீட்டராக பதிவானது. அணையின் நீா்வரத்து மற்றும் உபரிநீா் வெளியேற்றத்தை நீா்வள ஆதாரத் துறை உதவிப் பொறியாளா் கிருபாகரன் மற்றும் அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.
அணையின் நிலவரம் குறித்து அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் ஆய்வு செய்தனா். உபரிநீா் வெளியேறுவதால் தாழ்வான மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சிரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.