சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது. இது தொடா்பாக முதியவரைப் பிடித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் நுழையும் காட்டு யானைகள் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணையை ஒட்டி உள்ள வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை வெளியேறிய காட்டு யானை, அருகிலுள்ள சோளம் பயிரிட்டிருந்த தோட்டத்துக்குள் நுழைய முயன்றது.
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அந்த தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தும் அப்பகுதியைச் சோ்ந்த பெரிய முத்தான் (75) என்பவா் சட்டவிரோதமாக கம்பி வேலி அமைத்து அதில் மின்சாரம் பாய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து வனத் துறையினா் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சுமாா் 15 வயது உடைய பெண் யானை என்றும், கால்நடை மருத்துவரை வரவழைத்து யானையின் உடல் கூறாய்வு செய்யப்படும் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மின்வாரிய அலுவலா்கள் சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

