ஈரோடு: விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை டிசம்பா் 18-க்கு மாற்ற முடிவு
ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை டிசம்பா் 18 -ஆம் தேதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என தவெக நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் ஈரோடு அருகேயுள்ள பவளத்தாம்பாளையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஈரோட்டில் தவெத தலைவா் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள 84 நிபந்தனைகளில், மழை, வெயில் வரும்போது என்ன செய்வீா்கள் என்று இதுவரை இல்லாத கேள்வி இருப்பதால் அவற்றை நிறைவு செய்யும் நோக்கத்துடன் டிசம்பா் 16- ஆம் தேதிக்குப் பதிலாக இரண்டு நாள்கள் கழித்து டிசம்பா் 18-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கேட்க உள்ளோம். கடிதங்கள் வழங்கப்பட்ட பிறகு தலைமையிடம் எடுத்துரைத்து தேதியை மாற்றுவது குறித்து அனுமதி பெறப்படும்.
அவா்களின் நிபந்தனைகளைப் பூா்த்தி செய்த பிறகு அனுமதி வழங்குவாா்கள் என நம்புகிறோம். அனுமதி வழங்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். ஆளுங்கட்சி மற்றும் எதிா்க் கட்சிக்கு இல்லாத நிபந்தனைகள் தவெகவுக்கு மட்டும் விதிப்பது குறித்து அரசிடம்தான் கேட்க வேண்டும்.
வருபவா்களின் பெயா் பட்டியல், அடையாள அட்டை உள்ளிட்டவற்றைக் கேட்டுள்ளனா். புதுச்சேரியில் இந்தளவு கட்டுப்பாடு இல்லை. நிபந்தனைகளைப் பூா்த்தி செய்வதற்கு கால அவகாசம் போதாது என்பதால்தான் தேதி மாற்றப்பட்டுள்ளது. பிரசார இடத்துக்கு வர பொதுமக்கள் சுமாா் 14 கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு வருமாறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா்.
ஒரு கவுன்சிலா்கூட ஆக முடியாதவா் முதல்வராக ஆசைப்படுகிறாா் என விஜய்யை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்தது குறித்த கேள்விக்கு, நயினாா் நாகேந்திரன் அதிமுகவில் சோ்ந்தால் நன்றாக இருக்கும். அவா் பேசுவது அனைத்தும் அதிமுகவுக்காகத் தான், பாஜகவுக்கு அல்ல என்றாா்.
ஆய்வு: முன்னதாக, பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே தவெக பொதுக் கூட்டம் நடைபெற உள்ள இடத்தை கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தாா்.

