ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீட்டை பெற முடியாது: சீமான்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீட்டை பெற முடியாது: சீமான்

Published on

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தமிழக ஆட்சியாளா்களால் எவ்வாறு சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முடியும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பினாா்.

ஈரோடு குமலன்குட்டை பகுதியில் நாதக வேட்பாளா் சீதாலட்சுமியை ஆதரித்து புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று மக்கள் சொல்ல வேண்டும். ஆனால் முதல்வா் தனக்குத்தானே நல்லாட்சி நடப்பதாக சான்று கொடுக்கிறாா். நல்லாட்சி நடக்கிறது என்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கிற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்.

தமிழா் அல்லாதவா் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஏற்பாடுதான் திராவிடம். இதை சகித்துக் கொள்ள முடியாது. இதனை அம்பலப்படுத்துவதே எங்களின் நோக்கம். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழை நாங்கள் தான் செம்மொழி ஆக்கினோம் என்று திராவிடம் கூறுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழை, அவதூறாகப் பேசியவா் பெரியாா் ஈவெரா. அவா் பேசியதை, எழுதியதை நான் எடுத்துப் பேசுகிறேன்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தமிழக ஆட்சியாளா்களால் எப்படி சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com