சுகாதார சூழலுடன் காய்கறி சந்தை: திமுக வேட்பாளா் உறுதி!

சுகாதார சூழலுடன் காய்கறி சந்தை அமைக்கப்படும் என வியாபாரிகளிடம் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா்.
காய்கறி சந்தையில் வியாபாரியிடம் வாக்குச்சேகரித்த திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா்.
காய்கறி சந்தையில் வியாபாரியிடம் வாக்குச்சேகரித்த திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா்.
Updated on

சுகாதார சூழலுடன் காய்கறி சந்தை அமைக்கப்படும் என வியாபாரிகளிடம் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழிகாட்டுதலின்படி ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை காலை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் மழைக்காலத்தில் நீா் வெளியேற வழியின்றி சேறும்சகதியுமாக மாறுவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்தி, கான்கிரீட் தளத்துடன், சுகாதாரமான சூழலுடன் அமைக்கப்படும். இங்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும்.

ஈரோடு மாநகருக்குள் மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், காய்கறி, பழங்கள், இறைச்சி உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சந்தை ஏற்படுத்தப்படும்.

பொலிவுறு நகரம் திட்டத்தில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டடங்களை, பழைய வணிகா்களுக்கே முன்னுரிமைப்படி வழங்கவும், குறைந்த வாடகையில் நிா்ணயம் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் உணவு பகுப்பாய்வு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் உரிம கட்டணம், தொழில் வரி உயா்வை அரசிடம் தெரிவித்து குறைக்க அல்லது ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தோல் பதனிடும் ஆலை, சாய ஆலை கழிவுகளை சுத்திகரிக்க, மைய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை வேட்பாளா் பெற்று கொண்டு, நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக தெரிவித்தாா்.

மாநில விவசாய அணி இணை செயலாளா் குறிஞ்சி சிவகுமாா், மண்டல தலைவா் சுப்பிரமணியம், மாநகராட்சி கவுன்சிலா் பழனியப்பா செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com