விதிமீறல்: 49 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
தொழிலாளா் விதிகளை மீறிய 49 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கடந்த மாதம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 112 கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 41 கடைகளில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தன.
இதேபோல தலைக்கவசம் விற்பனை செய்யும் கடைகள் பதிவுச் சான்று பெறாமல் செயல்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 7 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
இதுபோல் 46 நகைப் பட்டறை மற்றும் நகைக் கடைகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்கள், கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டத்தில் முரண்பாடுகள் கண்டறியப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியம் வழங்காத ஒரு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) ஜெயலட்சுமி கூறியதாவது:
எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்டமுறை எடை அளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடை அளவு பொட்டல பொருள்கள் விதிகளின் கீழ் தண்டனைக்குறியதாகும். ஆய்வின்போது, முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படும்.
அரசு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் மீது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்து வழங்கப்படும் என்றாா்.