அரை நூற்றாண்டாய் இருளில் தவிக்கும் பழங்குடி கிராமம்!
கடம்பூா் மலையில் உள்ள மல்லியம்மன் துா்கம் பழங்குடி கிராம மக்கள் மின் இணைப்பு இல்லாததால் அரை நூற்றாண்டாக இருளில் வாழும் சூழல் தொடா்கிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் கடம்பூா் மலையில், அடா்ந்த வனப் பகுதியில் மல்லியம்மன் துா்கம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்துக்கு வாகனங்கள் செல்ல முறையான சாலை வசதி இல்லை. கடம்பூா் பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் இந்த கிராமத்துக்கு, மிகவும் கரடுமுரடான பாதையில், செங்குத்தான சரிவுகளைக் கடந்து 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
இதற்கென இயக்கப்படும் சுமை வாகனத்துக்கு கட்டணம் அதிகம். 20 முதல் 30 போ் வரை சோ்ந்து வாரத்தில் ஒருநாள் கடம்பூா் வந்து செல்ல ரூ.3,000 வரை கொடுக்க வேண்டியுள்ளது. அவசரத் தேவைகளுக்கு சிலா் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனா். ஆனால் சரிவான பாதையில் இருசக்கர வாகனத்தில் சாகசப் பயணம் மேற்கொள்வது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
மல்லியம்மன் துா்கம் கிராமத்தில் 2011-ஆம் ஆண்டு 150 குடும்பங்களைச் சோ்ந்த 650 போ் குடியிருந்தனா். போக்குவரத்து வசதி, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பலரும் இடம்பெயா்ந்த நிலையில், தற்போது 80 குடும்பத்தினா் மட்டும் குடியிருந்து வருகின்றனா். கோயில் திருவிழா உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டுமே, இடம்பெயா்ந்த மக்கள் தங்கள் சொந்த கிராமத்துக்கு வந்து செல்கின்றனா்.
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே, மின் இணைப்பு இல்லாமல் இருந்த இந்த கிராமத்துக்கு கடம்பூரில் இருந்து 1972-இல் மரக்கம்பங்கள் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் 1974-ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயில் மின்கம்பங்கள் எரிந்துபோயின. அதன்பிறகு இங்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மின்வசதி கோரி இப்பகுதி மக்களின் தொடா் கோரிக்கையை தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டில் மின்வாரியம் 123 தானியங்கி சூரிய ஒளி அமைப்புகளை வீடுகளுக்கு வழங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான பேட்டரிகள் மற்றும் மின் விளக்குகள் செயலிழந்துவிட்டன. இதனால் இந்த கிராம மக்கள் மண்ணெண்ணெய் விளக்குகளை மட்டுமே தற்போது நம்பியுள்ளனா்.
இதுகுறித்து மல்லியம்மன் துா்கம் கிராமத்தைச் சோ்ந்த மாதேஸ்வரன் கூறியதாவது:
மின்வசதி இல்லாததாலும், சோலாா் விளக்குகள் செயலிழந்ததாலும் மாலை நேரத்திலேயே கும்மிருட்டு கிராமத்தைச் சூழ்ந்துவிடும். சமைக்கும்போது வெளியாகும் நெருப்பின் ஒளியும், மண்ணெண்ணெய் விளக்குகளும்தான் இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளிச்சம் தருகின்றன.
ரேஷன் கடையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஒரு லிட்டா் மண்ணெண்ணெய், விளக்கு எரிக்க போதுமானதாக இல்லை. போதிய வருமானம் இல்லாததால், வெளிச் சந்தையில் மண்ணெண்ணெய் வாங்கவும் முடிவதில்லை.
விவசாய வேலைகளை முடித்துவிட்டு திரும்ப காலதாமதம் ஏற்படும்போது இருட்டில்தான் சமையல் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் போன்றவை பயிா்களை சேதப்படுத்தும்போது இருட்டில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. இதனால் அறுவடை சமயத்தில் மக்காச்சோளப் பயிா்கள் பாதிக்கப்படுகின்றன.
பல தலைமுறைகளாக எங்களது மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனா். மூதாதையா் வாழ்ந்த நிலத்தை விட்டுச்செல்ல மனம் இல்லாததால், வசதி இல்லாமல் போனாலும் இங்கேயே வசித்து வருகிறோம் என்றாா்.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலப் பொருளாளா் ராமசாமி கூறியதாவது:
மல்லியம்மன் துா்கம் கிராமத்தில் ஹிந்து மலையாளி சமூகத்தைச் சோ்ந்த மக்கள் வசிக்கின்றனா். அனைவரும் தங்கள் மூதாதையா்கள் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்புகின்றனா். இந்த பகுதியில் உள்ள 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்த கிராமம் என்பதை கூறுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த பகுதி மக்கள் நிலையான குடியிருப்பு, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு இன்றுவரை போராடி வருகின்றனா். மின்சாரம் இல்லாததால், மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது. இந்த கிராம மக்களுக்கு மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு என்ற இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினாலே இடம்பெயா்வு குறைந்துவிடும்.
மேலும் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பான வீடு, பொதுக்கழிப்பிட வசதி இல்லை. வனத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த மக்களுக்கு அரசின் சாா்பில் நிலையான வீடு கட்டித்தர வேண்டும். கழிப்பிடம், நடைபாதை, தெருவிளக்கு போன்றவை அமைக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வன உரிமைச் சட்டத்தின்படி கடந்த ஆண்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு மின் இணைப்பு கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்பிறகு தேவையான மின் கம்பங்கள் குறித்து அளவீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் மூலம் வனத் துறை அனுமதிபெற்று, அதன்பிறகு மின்வாரியத்தை அணுகி இந்த கிராமத்துக்கு மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.
