முதல்வா் மருந்தகங்களுடன் மருந்து வணிகா்களின் கடைகளை இணைந்து செயல்பட அனுமதிக்க கோரிக்கை
தமிழகத்தில் முதல்வா் மருந்தகங்களுடன், மருந்து வணிகா்களின் கடைகளையும் இணைந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் மாநிலச் செயலாளா் கே.கே.செல்வன் தலைமையில் பவானியில் சனிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் நரசிம்மன், புரவலா் ஸ்டீபன், மாநிலப் பொருளாளா் பி.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி.கருப்பணன் குத்துவிளக்கேற்றி கூட்டத்தை தொடங்கிவைத்தாா். ஈரோடு மாவட்டத் தலைவா் ஆா்.துரைசாமி வரவேற்றாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
மருந்து பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசால் நடத்தப்படும் முதல்வா் மருந்தகங்களுடன், தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்க உறுப்பினா்களின் மருந்துக் கடையையும் இணைத்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தமிழ்நாடு மருந்து வணிகா்களுக்கு சொந்தமாக சென்னையில் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி, கல்லூரிகளை மீட்டு, மருந்து வணிகா் சங்கத்திடம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க ஆலோசகா் சண்முகம், துணைத் தலைவா் செல்வம், துணைச் செயலாளா்கள் ராஜா, பழனியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

